
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை தலைமை கொறடாவுமான ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை செயலகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மக்களவையில் பதிலளித்தார் பிரதமர் மோடி. அப்போது தன் உரையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரி குறித்து பிரதமர் மோடி இழிவுபடுத்து பேசியதாகக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்.
`2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அப்போது (மாநிலங்களவை) தலைவர் எதிர்த்தரப்பு நோக்கிச் சாய்ந்தார்’ என்று மறைமுகமாக அன்றைய மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரியின் செயல்பாடு குறித்து தன் பதிலுரையில் குறிப்பிட்டிருந்தார் மோடி.
இது குறித்து தன் எக்ஸ் கணக்கில், `டாக்டர் ஹமீத் அன்சாரி எதிர்க்கட்சிகள் பக்கம் சாய்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, அது பொய்யானது மட்டுமல்லாமல், இழிவானதும் கூட. பிரதமர் மோடி அனைத்துவித நாடாளுமன்ற விதிமுறைகளையும், மரபுகளையும் உடைத்துள்ளார். உண்மையில் இந்தியப் பிரதமர் பதவியின் கண்ணியத்துக்கு ஒரு புதிய தாழ்வு நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார்’ என்று பதிவிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.