
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது (தேசத்தின்) சொத்துக்கள் இழப்பு குறித்து இந்தியா மௌனம் காத்தது என்றும், பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம் என்றும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மீண்டும் இன்று (மே 19) குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்கள் மீது இந்தியா நடத்தப்போகும் தாக்குதலில் இருந்து விலகி இருக்குமாறு பாகிஸ்தான் இராணுவத்திடம் இந்தியா தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது என்று ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்தை மேற்கொள்காட்டி ராகுல் காந்தி மீண்டும் தன் எக்ஸ் கணக்கில் இன்று பதிவிட்டுள்ளார்.
`வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது. எனவே மீண்டும் நான் கேட்கிறேன்: பாகிஸ்தானுக்குத் தெரிந்ததால் எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம்? இது குறைபாடு அல்ல; குற்றம். உண்மையைத் தெரிந்துகொள்ள தேசத்துக்குத் தகுதியுள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெய்சங்கர் பேசும் காணொளியை நேற்றைக்கு முந்தைய தினம் (மே 17) முதல்முறையாகப் பகிர்ந்த ராகுல் காந்தி, `தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இந்திய அரசு அதைச் செய்ததாக வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். யார் அதற்கு ஒப்புதல் வழங்கியது? இதனால் எத்தனை போர் விமானங்களை நம் விமானப்படை இழந்தது?’ என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு, `ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இது ஆபரேசன் சிந்தூர் தொடங்கியதற்குப் பிறகான ஆரம்ப கட்டமாகும். ஆனால் சிந்தூர் தொடங்கப்படுவதற்கு முன்பு என இது தவறாக சித்தரிக்கப்படுகிறது. உண்மைக்கு மாறான இந்த தகவல்களை நாங்கள் முற்றிலும் கண்டிக்கிறோம்’ என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது.