
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ல் ஒரேகட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கணிப்புகள், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கணித்திருந்தன.
ஆனால், இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் நேர்மாறாக உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. எனவே, அங்கு நிலையான அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வந்தது. சுமார் 9.30 மணியளவில் முடிவுகள் அப்படியே மாறத் தொடங்கின.
காங்கிரஸ் படிப்படியாக சரியத் தொடங்கி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 46-க்கு கீழ் குறைந்தது. பாஜக படிப்படியாக முன்னேற்றம் கண்டது. இந்த முன்னிலை நிலவரம் மாறவில்லை. பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து பாஜக சாதனை படைக்கவுள்ளது.
பிற்பகல் 3.25 மணி நிலவரப்படி காங்கிரஸ் 14 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. முன்னிலை நிலவரப்படி காங்கிரஸ் 20 இடங்களிலும் பாஜக 39 இடங்களிலும் இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 1 இடத்திலும் சுயேச்சை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
பின்னடைவைச் சந்தித்து வந்தாலும், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் ஆட்சிமைக்கும் என மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"என்னிடம் உள்ள தகவல்கள்படி, நாங்கள் பெரும்பான்மையைத் தொடுகிறோம். காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கிறது. நிறைய இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், இந்தத் தகவல்கள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
நிறைய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. எங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கிறது. இது ஓர் ஆட்டம். சில நேரங்களில் பந்து எங்கள் வசம் இருக்கும். சில நேரங்களில் பந்து அவர்களுடைய வசம் இருக்கும். ஆனால், இறுதி இலக்கை நாங்கள்தான் அடைவோம்" என்றார் பூபிந்தர் சிங் ஹூடா.
கர்ஹி சம்பலா - கிலோய் தொகுதியில் போட்டியிட்ட பூபிந்தர் சிங் ஹூடா 71,465 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.