ஹிமாச்சலில் காங்கிரஸ் அபாரம்!

6 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி.
ஹிமாச்சலில் காங்கிரஸ் அபாரம்!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி.

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தம் இருந்த 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுக்வீந்தர் சிங் சுக்கு முதல்வராகப் பொறுப்பேற்றார். பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

இந்த வருடம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 25 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சைகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் 6 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாநில சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனவே மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

ஜூன் 4 - இல் வெளியான இந்த இடைத்தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் காங்கிரஸும், 2 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. இதனால் ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் 38 இடங்களுடன் பலமாக உள்ளது காங்கிரஸ் கட்சி.

மேலும் கடந்த மார்ச் மாதம் 3 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்குக் கடிதம் வழங்கினர். இந்த ராஜினாமாவை ஜுன் 3 அன்று ஏற்றுக்கொண்டார் சபாநாயகர். எனவே ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மறுபடியும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in