
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் குறைபாடு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கேவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஜூன் 1-ல் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து நேற்று (டிச.24) அறிவிப்பு வெளியிட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. மேலும் பிரியங் கானுங்கோ, முன்னாள் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தேர்தெடுக்கும் 6 நபர் உயர்மட்டக் குழுவில் பிரதமர், மக்களவை சபாநாயகர், மத்திய உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த குழு பரிந்துரைக்கும் நபரை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்நிலையில், இந்த உயர்மட்டக் குழு கடந்த டிச.18-ல் கூடியது.
அப்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் ரோஹிங்டன் நாரிமன் மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் அவர்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, உயர்மட்டக் குழுவின் 4 உறுப்பினர்கள் ஆதரவுடன் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பெயர் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில், இத்தகைய தேர்வு முறையில் குறைபாடு உள்ளதாக ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கேவும் குறிப்பு எழுதியுள்ளனர்.