மக்களவைத் தேர்தலில் முக்கிய ஆலோசகரின் பங்களிப்பைத் தவிர்க்கும் காங்கிரஸ்!
ANI

மக்களவைத் தேர்தலில் முக்கிய ஆலோசகரின் பங்களிப்பைத் தவிர்க்கும் காங்கிரஸ்!

தேர்தல் ஆலோசகர் சுனில் கனுகோலு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்காகப் பணியாற்றப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on

தேர்தல் ஆலோசகர் சுனில் கனுகோலு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்காகப் பணியாற்றப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகம், தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குப் பின்னணியில் இருந்து தேர்தல் வியூக வல்லுநராகப் பணியாற்றியவர் சுனில் கனுகோலு. இதனால் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்காக கனுகோலு பணியாற்றப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு வருடங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வல்லுநராக இருந்தார். ஆனால், காங்கிரஸுடன் இணைந்து இனி பணியாற்ற மாட்டேன் என அவர் கூறிவிட்டார். இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர், சுனில் கனுகோலு என இரு முக்கிய ஆலோசகர்களின் துணையின்றித் தேர்தலைச் சந்திக்கவுள்ளது காங்கிரஸ் கட்சி.

மக்களவைத் தேர்தலில் கவனம் செலுத்துவதற்குப் பதில் ஹரியாணா மற்றும் மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுமாறு கனுகோலு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களிலும் 2024-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சுனில் கனுகோலு தனக்கான அணியை உருவாக்கித் தேர்தல் வேலைகளுக்குத் தயாராக உள்ளார். மேலும் இரு மாநிலங்களிலும் ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் முனைப்புடன் உள்ளதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக கனுகோலு உள்ளார். இப்பதவி கேபினட் அந்தஸ்துக்கு உரியது. தெலங்கானாவிலும் ஆட்சி மாற்றத்துக்கு கனுகோலு முக்கியப் பங்கு வகித்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் இந்த இரு மாநிலங்களிலும் அரசுகளுக்கு உறுதுணையாகத் தொடர்ந்து பணியாற்றவுள்ளார் சுனில் கனுகோலு.

logo
Kizhakku News
kizhakkunews.in