காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹரியானாவுக்கு அக்டோபர் 5-ல் தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. பாஜக ஏற்கெனவே 67 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகாட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் இணையவுள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் நேற்று கட்சியில் இணைந்தார்கள். வினேஷ் போகாட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் 32 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. வினேஷ் போகாட் ஜுலானா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஹோடல் தொகுதியிலும் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் கர்ஹி சாம்ப்லா - கிலோய் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அறிவிக்கப்பட்டுள்ள 32 தொகுதிகளில் 28 தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருப்பவர்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.