காங்கிரஸின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத் மகன் நகுல் நாத், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட்டுக்கு வாய்ப்பு.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்படம்: https://twitter.com/INCIndia

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த 8-ம் தேதி வெளியிட்டது. முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு திங்கள்கிழமை மாலை மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டன.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்கள். அசாம், மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ராஜஸ்தான், டாமன் டயூ ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் அசாம் மாநிலம் ஜோர்ஹத் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத் மகன் நகுல் நாத் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் கஸ்வா ராஜஸ்தானின் சுரு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மொத்தமுள்ள 43 பேரில் 10 பேர் பொதுப் பிரிவினர், 13 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், 10 பேர் பட்டியலினத்தவர்கள், 9 பேர் பழங்குடியினர் மற்றும் ஒருவர் இஸ்லாமியர் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in