
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் மங்களூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 இடங்களைக் கொண்ட உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 2022-ல் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் 47 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. இதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு முதல்வராக இருந்த பாஜகவைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் பத்ரிநாத் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் பண்டாரி தன் பதவி ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். மங்களூர் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சார்வத் கரீம் அன்சாரி கடந்த வருடம் மரணமடைந்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடந்தது. இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லக்காபட் சிங் புட்டோலாவும், மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வேட்பாளர் காஸி முகமது நிஜாமுதீனும் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகின்றனர்.
மேலும் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் அமரவாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.