ஜம்மு காஷ்மீர் தேர்தலை இணைந்து சந்திக்கும் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள்

மாநில அந்தஸ்துதான் எங்கள் குறிக்கோள். எங்களுக்கு மாநிலங்களுக்குரிய அனைத்து அதிகாரங்களும் தேவை. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதே எங்களின் திட்டம்
ஜம்மு காஷ்மீர் தேர்தலை இணைந்து சந்திக்கும் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள்
1 min read

வரும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை, காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாடு கட்சியும் இணைந்து சந்திக்க இருப்பதாக இன்று (ஆகஸ்ட் 22) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

90 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த வாரம் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2019-ல், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும். ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, இந்தத் தேர்தலை தனித்து சந்திப்பதாக அறிவித்தது பாஜக.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாநில கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை இணைந்து சந்திக்கப்போவதாக இன்று அறிவித்தார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃப்ரூக் அப்துல்லா. மேலும் இன்று மாலை தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார் ஃப்ரூக் அப்துல்லா.

இதைத் தொடர்ந்து, `கடந்த 10 வருடங்களாக மக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநில அந்தஸ்துதான் எங்கள் குறிக்கோள். எங்களுக்கு மாநிலங்களுக்குரிய அனைத்து அதிகாரங்களும் தேவை. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போராடுவதே எங்களின் திட்டம். எங்களுடன் சேர விரும்புபவர்களுக்கு கதவு திறந்தே உள்ளது’ என்று பேட்டியளித்தார் ஃபரூக் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீரின் மற்றொரு மாநிலக் கட்சியான முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னும் தன் தேர்தல் நிலைபாட்டை அறிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in