காங்கிரஸில் 300 இடங்களில் போட்டியிடக்கூட வேட்பாளர்கள் இல்லை: பிரதமர் மோடி

"தற்போது இண்டியா கூட்டணி எனும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளார்கள்."
காங்கிரஸில் 300 இடங்களில் போட்டியிடக்கூட வேட்பாளர்கள் இல்லை: பிரதமர் மோடி
ANI

ஒருகாலத்தில் 400 இடங்களில் வென்ற காங்கிரஸால் இன்று 300 இடங்களில்கூட போட்டியிட முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தானில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"முதற்கட்ட வாக்குப்பதிவில் ராஜஸ்தான் காங்கிரஸுக்கு நல்ல பாடத்தைப் புகட்டியுள்ளது. காங்கிரஸால் வலிமையான அரசை அமைக்க முடியாது என்பது தேசபக்தி மிகுந்த ராஜஸ்தான் மக்களுக்குத் தெரியும். காங்கிரஸ், ரிமோட் மூலம்தான் அரசை நடத்தி வந்துள்ளது. 2014-க்கு முன்பிருந்த நிலையை மக்கள் விரும்பவில்லை.

இன்று காங்கிரஸ் அடைந்துள்ள நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணம். ராஜஸ்தானிலிருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மாநிலங்களவைக்கு அனுப்பினீர்கள். தற்போது மற்றொரு காங்கிரஸ் தலைவரை (சோனியா காந்தி) மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள். தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற மாட்டோம் என அவர்களுக்குத் தெரியும். இதனால்தான், ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வாகியிருக்கிறார்கள்.

60 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த கட்சி காங்கிரஸ். ஒருகாலத்தில் அவர் 400 இடங்களில் வெற்றி பெற்று வந்தார்கள். இன்றைக்கு 300 இடங்களில் போட்டியிடக்கூட அவர்களால் வேட்பாளர்களைக் கண்டறிய முடியவில்லை. தாங்கள் செய்த தவறுக்கான பலனை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

தற்போது இண்டியா கூட்டணி எனும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளார்கள். ஆனால், அவர்களுடைய கூட்டணிக்குள்ளேயே எதிர்த்துப் போட்டியிட்டுக் கொள்கிறார்கள். மொத்தம் போட்டியிடும் இடங்களில் 25 சதவீத இடங்களில் அவர்களே நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்கள்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in