சொத்துகள் வாரிசைச் சென்றடையக் கூடாதா?: சாம் பித்ரோடா கருத்தைக் கொண்டு பிரதமர் பிரசாரம்

"காங்கிரஸை குடும்பச் சொத்தாகக் கருதி, அதைத் தங்களுடைய வாரிசுகளிடம் ஒப்படைப்பவர்கள்தான்.."
சொத்துகள் வாரிசைச் சென்றடையக் கூடாதா?: சாம் பித்ரோடா கருத்தைக் கொண்டு பிரதமர் பிரசாரம்
ANI

வாரிசுரிமை வரி குறித்து அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்தை விமர்சித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

"நடுத்தர வர்க்க மக்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என அரச குடும்ப இளவரசரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இவர்கள் தற்போது மேலும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள். வாரிசுரிமை வரி விதிக்க வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோர்களிடமிருந்து பெற்ற சொத்துகளுக்கு வாரிசுரிமை வரி விதிக்கப்படும். கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்துகள் உங்களுடைய வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படாது.

காங்கிரஸைப் பொறுத்தவரை, நீங்கள் உயிருடன் இருக்கும் வரை அதிக வரிச் சுமையைக் கொடுக்கும். உங்களுடைய மறைவுக்குப் பிறகும், வாரிசுரிமை சொத்து மூலம் சுமையைக் கொடுப்பார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸையும் குடும்பச் சொத்தாகக் கருதி, அதைத் தங்களுடைய வாரிசுகளிடம் ஒப்படைப்பவர்கள்தான், தற்போது இந்தியர்கள் தங்களுடைய சொத்துகளைக் தங்களது வாரிசுகளிடம் ஒப்படைப்பதை அனுமதிக்க மறுக்கிறார்கள்" என்றார் பிரதமர் மோடி.

மேலும், "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வந்தபோது முஸ்லிம் லீக் கட்சியினுடைய சாயல் இருப்பதாக ஒருமுறை நான் குறிப்பிட்டு பேசினேன். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, அம்பேத்கர் தலைமையிலான குழுவில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்துகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆந்திரத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வர முயற்சித்தார்கள். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இதை அமல்படுத்த திட்டமிட்டார்கள். எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் சிலவற்றைப் பறித்து அதை மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் மூலம் சிலரிடம் ஒப்படைக்கிறார்கள்" என்றார் அவர்.

அமெரிக்காவில் சில மாகாணங்களில் நடைமுறையில் உள்ள வாரிசுரிமை வரி குறித்து சாம் பித்ரோடா பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்தக் கருத்துக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

சாம் பித்ரோடாவும் தனது கருத்துக்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் தந்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பித்ரோட் பதிவிட்டுள்ளதாவது:

"55 சதவீத சொத்து பறித்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இதுமாதிரியான திட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னது யார்? பாஜகவும், ஊடகத்தினரும் ஏன் பதறுகிறார்கள். தொலைக்காட்சி விவாதத்தில் எனது சாதாரண உரையாடலின்போது, அமெரிக்காவில் வாரிசுரிமை வரி நடைமுறையில் இருப்பதாக ஓர் உதாரணத்தைக் குறிப்பிட்டேன். நான் உண்மையைக் குறிப்பிட்டு பேசக் கூடாதா? நான் பேசியதற்கும், காங்கிரஸ் உள்பட எந்தவொரு கட்சியின் கொள்கைக்கும் துளியும் தொடர்பும் கிடையாது" என்று பித்ரோடா விளக்கம் தந்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in