செபி தலைவர் பதவியிலிருந்து மாதவி புச்சை ராஜினாமா செய்யக்கோரி வரும் ஆகஸ்ட் 22-ல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் தொடர்புடைய சில வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதவி புச்சும், அவரது கணவர் தாவல் புச்சும் முதலீடு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
இதை அடுத்து வெளிநாட்டில் தாங்கள் மேற்கொண்ட முதலீடுகள் குறித்து அறிக்கை வாயிலாக இரண்டு முறை தன்னிலை விளக்கமளித்தனர் புச் தம்பதியினர்.
ஹிண்டன்பர்கின் இந்த அறிக்கையை முன்வைத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியுள்ளன இந்திய எதிர்க்கட்சிகள். ஏற்கனவே 2023-ல் அதானி குழுமம் மேற்கொண்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மீது செபி எந்த ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு மாதவி புச் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 13) தில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களும், மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் செபி தலைவர் பதவியில் இருந்து மாதவி புச்சை ராஜினாமா செய்யக்கோரி ஆகஸ்ட் 22-ல் நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.