
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிடத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சிக்கும், ஆளும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று (டிச.18) பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே அவருக்கு நினைவிடம் அமைக்கும் வகையில் ஒரு இடத்தை மத்திய அரசு தேர்ந்தெடுக்கக் கோரிக்கை விடுத்தார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர்களுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, அதன் முடிவுகளின்படி மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் கட்டும் வகையில் இடத்தை ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், `இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுகிறார்’ என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்,
`2010-ல் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இறந்தபிறகு, பாஜகவின் கோரிக்கை இன்றி, ஜெய்ப்பூரில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி, அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. 2012-ல் மகாராஷ்டிரத்தில் பால் தாக்கரே காலமான பிறகு, அன்றைய காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்குகளுக்காக மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கியது. காங்கிரஸ் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்தது’ என்றார்.
`முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி எப்படி நடந்துகொண்டது என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி எவ்வாறு நடத்தியது என்பதை அவரது மகள் ட்வீட் செய்திருந்தார். மன்மோகன் சிங் மறைவை வைத்து நாலாந்திர அரசியல் செய்வதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.