ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி?

ராகுல் காந்தியின் நடவடிக்கையை வரவேற்பதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
1 min read

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி அமைவது குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16 அன்று வெளியிடப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ஹரியானாவில் அக்டோபர் 1-ல் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போது ஹரியானாவில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தன. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.

இதனிடையே, காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சித் தலைவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார் ராகுல் காந்தி.

ஆங்கில ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் ஆம் ஆத்மிக்கு 4 இடங்கள் வரை ஒதுக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மேலும், முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆம் ஆத்மியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டது தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கையில், "இதை நாங்கள் வரவேற்கிறோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. ஹரியாணா மேலிடப் பொறுப்பாளர் சந்தீப் பதக் மற்றும் மாநிலத் தலைவர் சுஷில் குப்தா ஆகியோர்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள். இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தகவல் தெரிவிக்கப்படும். இதன்பிறகு, உரிய முடிவு எடுக்கப்படும்" என்றார் அவர்.

முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவில் 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியால் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in