10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாய ஹிந்தி பாடத்தை நீக்கவேண்டும்: கர்நாடக அமைப்பு கோரிக்கை

கடந்தாண்டு 90 ஆயிரம் மாணவர்கள் ஹிந்தி கட்டாய மொழிப்பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்கள். இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மது பங்காரப்பா
அமைச்சர் மது பங்காரப்பா
1 min read

கர்நாடக மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தி கட்டாய மொழிப் பாடமாக உள்ள நடைமுறையை நீக்கக்கோரி, கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிப் பாடங்கள் கட்டாய தாள்களாக உள்ளன. இவற்றில், ஹிந்தியை நீக்கக்கோரி கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பாவிடம் மனு அளித்துள்ளது `நம்ம நாடு நம்ம ஆள்விகே’ (என்.என்.என்.ஏ.) என்கிற அரசியல் கட்சி.

பிற மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாக ஹிந்தி இருப்பதால், கர்நாடகத்தின் 10-ம் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தடைபடுவதாகவும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்கள் மற்றும் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்கள் ஆகியவற்றில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாக இரு மொழிப்பாடங்கள் மட்டுமே இருப்பதாக இந்த அமைப்பினர் மேற்கோள்காட்டுகிறார்கள்.

குறிப்பாக, கடந்தாண்டு 90 ஆயிரம் கர்நாடக மாணவர்கள் ஹிந்தி கட்டாய மொழிப்பாடத்தில் தோல்வியடைந்ததாகவும், இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் இந்த அமைப்பினர் வழங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்.என்.என்.ஏ. அமைப்பினரின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அமைச்சர் மது பங்காரப்பா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக வளர்ச்சி அமைப்பின் தலைவர் புருஷோத்தம பில்லிமாலேவையும் சந்தித்து தங்கள் முன்னெடுப்பிற்கு அவர்கள் ஆதரவு கோரியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in