
அன்றைய இந்திய மன்னர்களுடன் இணைந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சீரழித்தது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரச குடும்ப வாரிசுகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
பிரபல நாளேடு ஒன்றில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதிய தலையங்கக் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், `கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை அமைதியாக்கியது. அதன் வணிக அதிகாரத்தால் இந்தியா அமைதியாகவில்லை, மாறாக அது மூச்சுத்திணற வைத்தால் இந்தியா அமைதியானது.
இந்தியாவின் மஹாராஜாக்கள் மற்றும் நவாப்களுடன் கூட்டணி அமைத்தும், அவர்களுக்கு லஞ்சம் அளித்தும், மிரட்டியும் இந்தியாவை மூச்சுத்திணற வைத்தது கிழக்கிந்திய கம்பெனி. நமது சுதந்திரத்தை வேறொரு நாட்டிடம் இழக்கவில்லை. வற்புறுத்தும் கருவியை உபயோகித்த ஒரு ஏகபோக நிறுவனத்திடமே நமது சுதந்திரத்தை இழந்தோம்’ என அவர் எழுதியிருந்தார்.
ராகுல் காந்தியின் கட்டுரைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் மத்திய தொலைதொடர்பு அமைச்சரும், குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா. எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அவர் கூறியவை பின்வருமாறு,
`நாட்டை தூக்கி நிறுத்துவதாக நீங்கள் உரிமை கோரினால் முதலில் பாரத மாதாவை அவமானப்படுத்துவதை நிறுத்தவேண்டும். நமது சுதந்திரத்துக்காகக் கடுமையாகப் போராடிய உண்மையான இந்திய ஹீரோக்களான மஹாத்ஜி சிந்தியா, யுவராஜ் பிர் திக்கேந்திரஜித், கிட்டூர் சென்னம்மா, ராணி வேலு நாச்சியார் ஆகியோரைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களின் அதிருப்தி காங்கிரஸின் திட்டத்தைக் காட்டுகிறது. ராகுல் காந்தி ஒன்றும் சுயசார்பு இந்தியாவின் சாம்பியன் அல்ல. அவர் காலவதியான உரிமை ஒன்றின் தயாரிப்பாகும்’ என்றார்.
மேலும், ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் இரண்டாம் மான் சிங்கின் கொள்ளுப்பேத்தியும், தற்போதைய ராஜஸ்தான் துணை முதல்வருமான தியா குமாரி, ஜெய்சால்மிர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த சைதன்யா ராஜ் சிங், மேவார் அரச குடும்பத்தைச் சேர்ந்த விஷ்வராஜ் சிங் ஆகியோரும் ராகுல் காந்திக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.