தில்லி சட்டப்பேரவைத் தேர்தல்: முழுமையான முடிவுகள் வெளியீடு!

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும், முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தோல்வியடைந்தார்கள்.
தில்லி சட்டப்பேரவை
தில்லி சட்டப்பேரவைANI
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக. 22 தொகுதிகள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்துள்ளது ஆம் ஆத்மி.

70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த பிப்.5-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. வாக்குப்பதிவின் முடிவில் 60.42 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப்.8) காலை 8 மணி அளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மியைவிட அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது பாஜக. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தில்லியின் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.

22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி. குறிப்பாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தில்லி முதல்வராக இருந்தவருமான அரவிந்த் கெஜ்ரிவால் புது தில்லி தொகுதியில் தோல்வியடைந்தார்.

கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் அமைச்சர் சௌரப் பரத்வாஜும், மடிபூர் தொகுதியில் தில்லி துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவும் தோல்வியடைந்தார்கள். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஷகுர்பஸ்தி தொகுதியிலும் தோல்வியடைந்தார்கள்.

அதேநேரம், முதல்வர் ஆதிஷி, அமைச்சர்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசைன், முகேஷ் குமார் அஹ்லவத் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in