
திஷா சாலியான் மரணம் தொடர்பாக, சிவசேனா (உபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தாக்கரே மீது மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அவரது தந்தை சதீஷ் சாலியான்.
மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளராகப் பணியாற்றிய திஷா சாலியான், கடந்த 8 ஜூன் 2020 அன்று மும்பையில் இருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். திஷா சாலியான் விபத்தில் உயிரிழந்ததாக அப்போது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
திஷா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, சிறப்பு புலனாய்வுக் குழுவை கடந்த 2023-ல் மஹாராஷ்டிர மாநில அரசு அமைத்தது. இந்நிலையில், தனது மகளின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பை காவல் ஆணையரிடம் அவரது தந்தை சதீஷ் சாலியான் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசேனா (உபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், வோர்லி எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தாக்கரே, தினோ மோரியா, சூரஜ் பன்சோலி, அவரது மெய்க்காப்பாளர் பரம்பீர் சிங், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி சச்சின் வேஸ் மற்றும் ரியா சக்கரவர்த்தி ஆகியோர் மீது தன் புகார் மனுவில் சதீஷ் சாலியான் குற்றம்சாட்டியுள்ளார்.
சதீஷ் சாலியான் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கிய அவரது வழக்கறிஞர் நிலேஷ் ஓஜா, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆதித்யா தாக்கரே, தினோ மோரியா ஆகியோர் திஷாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததைப் பார்த்ததற்கு சாட்சிகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்படுவதாகவும் ஆதித்யா தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால், அப்போது அது தொடர்பான பதிலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.