எதற்காக மக்களவை சபாநாயகர் பதவிக்குக் கடும் போட்டி நடக்கிறது?

1998 இல் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகியும், 2002 இல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியும் மக்களவை சபாநாயகர்களாகப் பதவி வகித்துள்ளனர்.
எதற்காக மக்களவை சபாநாயகர் பதவிக்குக் கடும் போட்டி நடக்கிறது?

ஜூன் 4 இல் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்திருந்தாலும், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. எனவே கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியமைப்பதில் மும்முரமாக இறங்கியது பாஜக.

பாஜகவின் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமாரும் ஜூன் 5 அன்று டெல்லியில் நடந்த பாஜக கூட்டணிக்கட்சிகளின் கூட்டத்திற்குச் சென்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதற்கான தங்களின் ஆதரவை வழங்கிவிட்டனர்.

ஆனால் பதவியேற்க இருக்கும் மத்திய அரசில் தங்கள் கட்சிகளுக்குத் தேவையான பதவிகளைப் பெறுவதில் இவர்கள் இருவரும் திரைமறைவு பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரத்தில் இரு கட்சிகளும் மக்களவை சபாநாயகர் பதவியைக் கேட்டுவருவதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான முக்கியத்துவத்தை முதலில் பார்ப்போம். சபாநாயகர் என்பவர் மக்களவையின் தலைவர். மக்களவையை வழிநடத்தும் இவரிடம் இருக்கும் அதிகாரங்கள்:

1) மக்களவையைத் தொடங்குவது-ஒத்திவைப்பது,

2) இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வரும் மக்களவை எம்.பி.களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது,

3) மக்களவை எம்.பி.களுக்கு அவையில் பேச நேரம் ஒதுக்குவது,

4) மக்களவை எம்.பி.க்கள் குழுக்களை அமைப்பது,

5) அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மக்களவை எம்.பி.களை இடைநீக்கம் செய்வது,

6) கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் மூலம் எம்.பி.களை டிஸ்மிஸ் செய்வது,

7) மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிவிப்பது,

8) முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவது,

9) சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பை நடத்துவது,

என மக்களவைக்குள் வானளாவிய அதிகாரம் பெற்றவர் சபாநாயகர்.

சபாநாயகர் மனதுவைத்தால் மட்டுமே மக்களவையில் எதுவும் நடக்கும். பிரதமர் மக்களவையில் பேச நினைத்தால் கூட அதற்கு சபாநாயகரின் அனுமதி அவசியம். மேலும் மக்களவை சார்ந்த விசயங்களில் சபாநாயகரின் முடிவு இறுதியானது, அதில் நீதிமன்றங்கள் கூடத் தலையிட முடியாது.

இவ்வளவு மதிப்புமிக்க, அதிகாரம் பொருந்திய மக்களவை சபாநாயகர் பதவிக்கு மற்றோரு முக்கியக்கடமை இருக்கிறது, அதுதான் `நடுநிலைமை’.

மக்களவையின் தலைவரான சபாநாயகர் கட்சிபேதம் இன்றி செயல்பட்டு, மக்களவைக்குள் இருக்கும் அனைத்துக்கட்சி எம்.பி.களையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் இப்படி நடந்த நிகழ்வுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

கடந்த காலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கட்சிகள் தங்கள் கட்சியின் எம்.பி.யை சபாநாயகராக்கி, அவரை வைத்து ஆளும்கட்சியின் எண்ணங்களை மக்களவையில் செயல்படுத்தியுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, அதற்கு முன்பு இருந்த சுமித்ரா மஹாஜன், 1991 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரான சிவராஜ் பாட்டீல் போன்றோரைக் குறிப்பிடலாம்.

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்த ஒரு சில சமயங்களில் மட்டும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாகப் பதவி வகித்துள்ளனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998 இல் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பாலயோகியும், 2002 இல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷியும் சபாநாயகர்களாகப் பதவி வகித்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் சபாநாயகர் பதவி என்பது மத்திய கேபினட் அமைச்சர் பதவியை விட உயர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நிகரானது சபாநாயகர் பதவி. எனவே இந்தப் பதவியைப் பெறுவது ஒரு வகையில் பெரும் கெளரவம்.

மேலும், நடக்கப்போவது கூட்டணி ஆட்சி என்பதால் வரும்காலத்தில் பாஜகவுடன் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மக்களவையில் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ள சபாநாயகர் பதவி அவசியம் என்பதாலும் கூட அதைப் பெற தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் போட்டி போடுகின்றன.

மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவை இந்த இரு கட்சிகளிடம் இருந்தும் பாஜக பெற்றுவிட்டது. ஆனால் மதிப்புமிக்க சபாநாயகர் பதவி எந்தக் கட்சிக்குச் செல்கிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in