தனியார் பயிற்சி மையங்கள் வணிகமயமாகிவிட்டன: ஜெக்தீப் தங்கர்

மாணவர்கள் நலனில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த ஜனவரியில் தனியார் பயிற்சி மையங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது
தனியார் பயிற்சி மையங்கள் வணிகமயமாகிவிட்டன: ஜெக்தீப் தங்கர்
1 min read

கடந்த ஜூலை 27-ல் தில்லியில் உள்ள குடிமைப் பணி தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் செயல்பட்டு வந்த படிப்பகத்தில் வெள்ளம் புகுந்து, அதனால் மூன்று மாணவர்கள் மரணமடைந்தனர். இந்த மரண சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க நோட்டீஸ் அளித்தார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால். இந்த நோட்டீஸ் மீது விவாதம் நடத்த ஒப்புக்கொண்டார் மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தங்கர்.

`(தனியார்) பயிற்சி மையங்கள் வணிகமயமாகிவிட்டன. இதை ஒட்டி செய்தித்தாள்களின் முதல் இரண்டு பக்கங்களில் ஒவ்வொரு நாளும் விளம்பரங்கள் வெளியாகின்றன. வாய்ப்புகள் அதிகரிக்கும் ஒரு நாட்டில் இதைப் போன்ற விஷயங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன’ என்று இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார் ஜெக்தீப் தங்கர்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், `மாணவர்கள் தற்கொலை செய்வது நாட்டில் நடக்கும் பிரச்னைகளில் முக்கியமானது. அதிலும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இரண்டாம் தரமாக நடத்தப்படுகின்றனர். நேற்று முந்தைய தினம் மூன்று மாணவர்கள் தில்லியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் உயிரிழந்துள்ளனர். பயிற்சி மையங்கள் மாஃபியாக்கள் ஆகிவிட்டன. இதை எதிர்த்து அரசு எதாவது நடவடிக்கை எடுக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், `மாணவர்களின் நலனில் அரசு உறுதியாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தனியார் பயிற்சி மையங்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. கோவா போன்ற மாநிலங்களில் பயிற்சி மையங்களுக்கான மாநில அரசுகளின் வழிகாட்டுதல்கள் அமலில் உள்ளன’ என்றார்.

`தில்லி அரசு தலைநகரில் எந்த வேலையும் பார்ப்பதில்லை. உத்தர பிரதேசம், தெலங்கானா, கேரளாவில் இருந்து குடிமை பணி தேர்வுக்குத் தயாராவதற்காகவே மூன்று மாணவர்கள் தில்லிக்கு வந்தனர். ஆனால் தில்லி அரசின் அக்கறையின்மையின் காரணமாகவே அவர்கள் மூவரும் மரணமடைந்துள்ளனர்’ என்று தன் பேச்சில் ஆம் ஆத்மி அரசைக் குற்றம்சாட்டினார் பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in