கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரக் காரணமான மனைகளை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி முடா அமைப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதல்வரின் மனைவி பார்வதி.
மைசூரு பகுதி மக்களிடம் இருந்து அரசாங்க வளர்ச்சிப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, மாற்று நிலங்களை மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பு (முடா) ஒதுக்குகிறது. இதன்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் பார்வதியிடம் இருந்து கையகப்படுத்தபட்ட நிலத்தின் மதிப்பைவிட, அதிக மதிப்பிலான 14 மனைகள் ஒதுக்கப்பட்டதாகவும், இதனால் ரூ. 45 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் முறைகேடு புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து அவரை விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா மீது கடந்த செப்.27-ல் கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் நில முறைகேடு வழக்கை பதிவு செய்தனர். மேலும், சித்தராமையா மீது நேற்று (செப்.30) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை.
இந்நிலையில், சித்தராமையாவின் மனைவி பார்வதி தனக்கு ஒதுக்கப்பட்ட 14 மனைகளைத் திரும்ப வழங்குவதாக மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்புக்கு (முடா) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை இன்று (அக்.1) காலை முடா அலுவலகத்தில் சமர்ப்பித்தார் முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடக சட்டமேலவை உறுப்பினருமான யதீந்திரா.