தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், இரவு 8.30 மணிக்கு தில்லியைச் சென்றடைந்தார். முதல்வரை தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திமுக மக்களவை எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியையும், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பான ரூ. 7,425 கோடி நிதியையும் விடுவிக்கக்கோரி பிரதமர் மோடியிடம் மனு வழங்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு, மேகேதாட்டு மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரங்கள், தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மசோதாக்கள், தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் வழங்கும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.