
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார் அக்கட்சித் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று (பிப்.7) புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டார் அக்கட்சித் தலைவரான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இந்த விழாவில், வரும் 2026-ல் நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமல்லாமல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் ரங்கசாமி.
புதுச்சேரி காங்கிரஸில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரங்கசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் 2001 முதல் 2006 வரையிலும், 2006 முதல் 2008 வரையிலும் இரு முறை புதுச்சேரி முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய ரங்கசாமி, 2011-ல் நடைபெறவிருந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் முன்பு என்.ஆர். காங்கிரஸ் என்கிற தனிக்கட்சியைத் தொடங்கி, தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுச்சேரியின் ஆட்சியைப் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்திருந்தாலும், 2021 தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மீண்டும் புதுச்சேரியின் ஆட்சியைப் பிடித்தார் ரங்கசாமி.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று ரங்கசாமி அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.