தொடர்ச்சியாக இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதை அடுத்து வெள்ள நீர் தேங்கியுள்ள விஜயவாடா நகரத்தில் படகில் சென்று இன்று (செப்.02) காலை ஆய்வு மேற்கொண்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் 31-ல் ஆந்திராவின் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர் போன்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் வாரங்கல், கம்மம், மெஹபூபாபாத் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை நேற்று கரையைக் கடந்ததால் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கனமழை பெய்து பாதிப்பின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் விஜயவாடா நகரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இன்று காலை படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, `பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்துவித உதவிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. 110 படகுகளில் உணவுகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தொடர்ச்சியாக நான் ஆய்வு செய்து வருகிறேன்’ என்றார்.
வெள்ளத்தின் தாக்கத்தால் சில இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதை அடுத்து இன்று 21-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.