
பொது இடங்களிலும், ஹோட்டல்களிலும் மாட்டுக்கறி உணவருந்த தடை விதிக்கப்படுவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஹோட்டல்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும் மாட்டுக்கறி உணவருந்த தடைவிதிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நேற்று (டிச.5) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. ஆனால் வீடுகளில் மாட்டுக்கறி உணவருந்துவது அம்மாநிலத்தில் தடை செய்யப்படவில்லை.
ஹிந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் மாடுகளைக் கொல்லவும், மாட்டுக்கறி உணவருந்தவும் கடந்த 2021-ல் நிறைவேற்றப்பட்ட அசாம் பசு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் மாட்டுக்கறி தொடர்பான புதிய தடை குறித்து நேற்று (டிச.5) செய்தியாளர்கள் சந்திப்பில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த சர்மா பேசியவை பின்வருமாறு,
`பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்ஸாமில் நாங்கள் சட்டமியற்றினோம். இதனால் பல நன்மைகள் நடந்துள்ளன. எனவே இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, அஸ்ஸாமில் உள்ள ஹோட்டல்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும் மாட்டுக்கறி உணவருந்த தடை விதிக்கப்படுகிறது.
கோயில்களுக்கு ஐந்து கி.மீ. சுற்றளவில் இதற்கான தடை உத்தரவு முன்பு அமலில் இருந்தது. இந்த தடை தற்போது மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது’ என்றார்.
இது தொடர்பாக விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் கௌரவ் கோகாய், `ஜார்க்கண்டில் பாஜகவின் தோல்விக்கு வித்திட்ட அஸ்ஸாம் முதல்வர், தன் தோல்வியை மறைக்கும் வகையில் இத்தகைய சதியில் ஈடுபட்டுள்ளார். ஊழலில் ஊறிப்போயுள்ள ஹிமந்த சர்மாவின் அரசுக்கு அஸ்ஸாம் மக்கள் தக்க தண்டனை புகட்டுவார்கள்’ என்றார்.