
மராத்தி மொழியை முன்வைத்து மகாராஷ்டிராத்தில் அண்மை காலமாக அதிகரித்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், `மாநிலத்தில் மொழியின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பவங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று (ஜூலை 4) கருத்து தெரிவித்துள்ளார்.
`மராத்தி மொழியில் பெருமை கொள்வது தவறல்ல, ஆனால் மொழியின் பெயரால் யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம்’ என்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் முதல்வர் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
தானேவின் பயந்தரில் உணவகம் நடத்தும் ஒருவர் மராத்தி மொழியில் பேசாததற்காக, ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் அவரைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, முதலமைச்சரின் இத்தகைய கருத்துகள் வெளிவந்துள்ளன.
பாபுலால் கிமாஜி சௌத்ரி என்று அறியப்படும் அந்த கடை உரிமையாளரிடம், `உனக்கு மராத்தி தெரியாவிட்டால், மகாராஷ்டிரத்தில் வசிக்காதே. நீ மராத்தியில் பேசாவிட்டால், (கடையில் உணவருந்தும்) அனைவரையும் நாங்கள் அடித்து விரட்டுவோம், உன் கடையை உடைத்து எரிப்போம்’ என்று எம்.என்.எஸ். கட்சியினர் மிரட்டியுள்ளனர்.
மக்கள் மராத்தியில் பேசவேண்டும் என்று எந்த அரசாங்க விதி கூறுகிறது என்பதைத் தெரிவிக்குமாறு அவர்களிடம் சௌத்ரி கேட்டுள்ளார். பதிலுக்கு அவர்கள், `மகாராஷ்டிரத்தில் என்ன மொழி பேசப்படுகிறது’ என்று கேட்டதற்கு, `அனைத்து மொழிகளும்’ என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த பதிலைக் கேட்டு அவர்கள் மிகவும் கோபமடைந்து, சௌத்ரியை தாக்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது முதல்வரும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.