
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் இன்று (ஆக. 26) நிகழ்ந்த மேகவெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கத்துவா மற்றும் கிஸ்த்வார் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டோடாவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கத்துவா, சம்பா, டோடா, ஜம்மு, ராம்பன் மற்றும் கிஸ்த்வார் மாவட்டங்கள் உள்பட ஜம்மு பிராந்தியத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டோடா தவிர்த்துப் பிற இடங்களில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக ஜம்மு பிராந்தியம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் பெருமளவு கற்கள் சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் ஏற்கனவே அபாய கட்டத்தைத் தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், மேலும் குறிப்பிடத்தக்க அளவு நீர் மட்டம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
`ஜம்மு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் நீர்நிலைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று மூத்த அதிகாரி ஒருவர் இந்தியா டுடே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிராந்தியத்தின் தெற்கு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது, குறிப்பாக உயரமான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஜீலம் நதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றாலும், நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய காஷ்மீரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வடக்கு காஷ்மீரில் லேசான மழை அல்லது வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.