
இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை 4.40 மணி அளவில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா, குலு, மண்டி மாவட்டங்களில் மேக வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பொது மக்கள் 50 பேர் மாயமடைந்துள்ளதாகவும், உயிரிழந்த 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணிகளை மேற்கொள்ள மாநில தீயணைப்புத்துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார் ஹிமாச்சல மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு.
அடுத்த 36 மணி நேரத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பியஸ் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை அடுத்து பியஸ் நதிக்கரைக்கு அருகே வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேக வெடிப்பு என்பது திடீரென்று எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் பெய்யும் கனமழையாகும். 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் கூடிய ஒரு இடத்தில், ஒரு மணி நேரத்தில் சுமார் 100 மி.மீ அல்லது 10 செ.மீ அளவுக்குப் பெய்யும் மழைப்பொழிவு சம்பவங்கள், மேக வெடிப்புகள் என்று வகைப்படுத்தப்படும். மேக வெடிப்பு சம்பவங்களைத் துல்லியமாகக் கணிப்பது மிகவும் கடினமாகும்.