தேர்தல் நேர இலவச அறிவிப்புகள் கவலை அளிக்கின்றன: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து | CJI |

தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டுக் கூறவில்லை. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தே இந்தக் கேள்வி கேட்கிறேன்...
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
2 min read

தேர்தலுக்கு முன்னதாக மாநில அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் மற்றும் நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் மின்சார திருத்த விதிகள் 2024-க்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆஜரானார்.

தலைமை நீதிபதி கேள்வி

விசாரணையின் போது, மின்சாரக் கட்டணங்களை அரசே ஏற்பது குறித்துக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சூர்ய காந்த் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்விகள்:-

“இலவசங்கள் காரணமாக நாடு முழுவதும் எத்தகைய கலாசாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்? இது பொது நலனுக்கு உகந்ததா?

மக்கள் நலன் கருதி செயல்படும் அரசு, விளிம்புநிலை மக்களுக்கு உதவி செய்வது அவசியம். ஆனால், கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே எந்தப் பாகுபாடும் காட்டாமல் அனைவருக்கும் இலவசங்களை வழங்குவது என்பது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது இல்லை.

அரசின் கருவூலத்திலிருந்து பணத்தை இலவசங்களுக்காகப் பயன்படுத்தினால் தேசத்தின் வளர்ச்சி தடைபடும். இதற்கு ஒரு முடிவு எப்போது வரும்? தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டுக் கூறவில்லை. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தே இந்தக் கேள்வி கேட்கிறேன். நாம் எத்தகைய கலாசாரத்தை உருவாக்கி வருகிறோம்?

நாட்டில் என்ன நடக்கிறது?

வருவாய் உபரி மாநிலமாக இருந்தாலும் கூட, அந்தத் தொகையைச் சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற ஒட்டுமொத்தப் பொதுமக்களின் மேம்பாட்டிற்காகச் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? அதற்குப் பதிலாக, உணவு மற்றும் ஆடைகளை விநியோகித்துக் கொண்டே இருந்தால் மக்களுக்கு உழைக்க வாய்ப்பு வழங்குவது எப்போது? இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

இலவசம் தர பணம் எங்கிருந்து வருகிறது?

சமீபத்தில் தேர்தல்கள் நடந்த இடங்களில் நடந்தவை நமக்குத் தெரியும். தேர்தலுக்கு மிக அருகில் ஏன் திடீரென்று திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன? அனைத்து அரசியல் தலைவர்கள், கட்சிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையில் இயங்கிக் கொண்டிருக்கும் போதும், மக்களுக்கு இது போன்ற பண விநியோகம் செய்வதுதான் எங்களது கவலை. அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கக்கூடாது?” என்று கேட்டார்.அதன்பின் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சம்மன் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Summary

The Supreme Court has strongly condemned the free schemes and direct cash transfer schemes announced by state governments ahead of elections.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in