
14 வழக்கறிஞர்களை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர்களில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் உறவினர் ராஜ் தாமோதர் வகோடேவும் அடக்கம்.
தலைமை நீதிபதியின் உறவினரின் மகனாக அடையாளம் காணப்படும் வகோடே, அவருக்கு மருமகன் முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தலைமை நீதிபதியின் சகோதரரான மருத்துவர் ராஜேந்திர கவாய், வகோடேவை தூரத்து உறவினராக கருதவேண்டும் என்று இந்தியா டுடே ஊடகத்திடம் கூறியுள்ளார்.
கொலீஜியத்தின் செயல்பாடு
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய தேர்வர்கள் சம்பந்தப்பட்ட கொலீஜியத்தின் விவாதங்களில் இருந்து தலைமை நீதிபதி கவாய் விலகியதாக நம்பத்தகுந்த உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், வகோடேவின் பெயருடன் தலைமை நீதிபதியுடன் கடந்த காலகட்டத்தில் தொழில்முறை தொடர்புகளைக் கொண்டிருந்த இரு வழக்கறிஞர்களின் பெயரும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னுதாரணங்கள்
அரிதிலும் அரிதாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களும், நீதிபதிகளின் நெருங்கிய கூட்டாளிகளும் நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுள்ள நிகழ்வுகள் பல முறை நடந்துள்ளன.
உதாரணமாக நீதிபதி ஒய். வி. சந்திரசூட் மற்றும் அவரது மகன், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இருவரும் இந்தியாவின் தலைமை நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர்; நீதிபதி எச்.ஆர். கன்னா மற்றும் அவரது மருமகனான தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா; மேலும் நீதிபதி இ.எஸ். வெங்கடராமையா மற்றும் 2027-ல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள அவரது மகள் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகியோர் இந்த பட்டியலில் அடக்கம்.