குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை | Supreme Court

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது தொடர்புடைய வழக்கு.
குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை | Supreme Court
2 min read

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு ஜூலை 22-ல் விசாரிக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்து. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தொடர்பாக, மசோதா நிறைவேற்றப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் ஆளுநர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுமட்டுமின்றி, ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த மசோதாக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார்.

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள்

  1. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்னென்ன?

  2. ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் அவருக்கு உள்ள வாய்ப்புகளை உபயோகப்படுத்துவதில், ​​அமைச்சரவையால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுவாரா?

  3. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு விருப்புரிமையை (discretion) ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?

  4. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிரான நீதி த்துறையின் ஆய்வுக்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361 முழுமையாக தடை விதிக்கிறதா?

  5. காலக்கெடு குறித்தும், ஆளுநருக்கான அதிகாரம் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்படாத நிலையில், பிரிவு 200-ன் கீழ், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மூலம் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கவும், அவர் செயல்படுவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் முடியுமா?

  6. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

  7. காலக்கெடு குறித்தும், குடியரசுத் தலைவருக்கான அதிகாரம் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்படாத நிலையில், பிரிவு 201-ன் கீழ், நீதிமன்றங்களின் உத்தரவுகள் மூலம் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு விதிக்கவும், அவர் செயல்படுவதற்கான பரிந்துரைகளை வழங்கவும், முடியுமா?

  8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பும்போது அல்லது கிடப்பில் வைக்கும்போது, குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், ​​சட்டப்பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?

  9. சட்டப்பிரிவுகள் 200 மற்றும் 201-ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் அளிக்கும் ஒப்புதலின்பேரில் ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் நீதிமன்றங்கள் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பு வழங்க அனுமதி உள்ளதா?

  10. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள், உத்தரவுகள் போன்றவற்றுக்கு ஈடாக எந்த வகையிலாவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-க்கு அதிகாரம் உள்ளதா?

  11. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

  12. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145(3)-ன் கீழ், உச்ச நீதிமன்றத்தின் எந்தவோர் அமர்வும், அதன் முன்னர் உள்ள வழக்கில் அரசியலமைப்பு விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகள் உள்ளதா என்பதை முதலில் முடிவு செய்து, பின்னர் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?

  13. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 143-ன் கீழ், உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், நடைமுறைச் சட்டம் தொடர்பான விஷயங்கள் மீது மட்டும் முடிவெடுக்க முடியுமா? அல்லது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் போன்றவற்றுக்கு முரணான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமா?

  14. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 131-ன் கீழ் வழக்கு தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு வேறு எந்த வழிமுறையையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பிஎஸ் நரசிம்மா மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து ஜூலை 22-ல் விசாரிக்கிறது.

Supreme Court | President | President of India | Droupadi Murmu | Governors | Bills | Constitutional Bench | CJI BR Gavai

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in