இண்டிகோ விமான குளறுபடிக்கு நிர்வாக திட்டமிடல் தவறே காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம் | IndiGo Airlines |

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ கடுமையான சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகள் நடைமுறையில் உள்ளன....
இண்டிகோ விமானம் (கோப்புப்படம்)
இண்டிகோ விமானம் (கோப்புப்படம்)
1 min read

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிர்வாகத் திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கமளித்தார்.

கடந்த ஒரு வாரமாக இண்டிகோ விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டன. விமான பணியாளர்களுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால் இண்டிகோ நிறுவனம் சேவைகளை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்தானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்தச் சம்பவம் இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்தையே திருப்பிப் போட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கமளித்தார்.

நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:-

“இண்டிகோ நிறுவனத்தின் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் அட்டவணை மற்றும் நிர்வாகத் திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே குளறுபடிக்கு காரணம். கடந்த டிசம்பர் 1 அன்று நடந்த கூட்டத்தில் கூட, விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்பாக எவ்வித ஆட்சேபனையையும் இண்டிகோ நிறுவனம் தெரிவிக்கவில்லை. விமானப் போக்குவரத்து துறையில் அதிகமான நிறுவனங்கள் வர வேண்டும். இந்தியாவில் தற்போது 5 பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதுவும் அமைச்சகம் தரப்பில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகும்.

தாமதங்கள் மற்றும் ரத்து நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும், கடுமையான சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகள் நடைமுறையில் உள்ளன. விமான நிறுவனங்கள் இந்தத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும். விமானங்களில் அவ்வப்போது ஏற்படும் மென்பொருள் பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப மேம்பாடு நடந்து வருகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை உலகத் தரம் வாய்ந்த உயர்ந்த தரநிலைகளை கொண்டு வருவதே அரசின் தொலைநோக்குப் பார்வை. கடந்த 3 நாள்களில் மட்டும் 5,86,705 இண்டிகோ பயணிகளுக்கு அவர்களின் பயணச்சீட்டுத் தொகையான ரூ. 569 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Summary

Union Civil Aviation Minister Ram Mohan Naidu explained that the cause of the chaos at IndiGo Airlines was errors in management planning.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in