இண்டியா கூட்டணி ஜூன் 4-ல் மத்தியில் ஆட்சியமைக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்ட் 15 முதல் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
"இளைஞர்களே! ஜூன் 4-ல் இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கானப் பணிகளை ஆகஸ்ட் 15 முதல் தொடங்குவோம் என்று வாக்குறுதியளிக்கிறேன்.
நரேந்திர மோடியின் தவறான பிரசாரங்களில் வீழாமல், உங்களுடையப் பிரச்னைகளில் உறுதியாக இருங்கள். இண்டியா கூட்டணியைப் பின்பற்றி வெறுப்பைத் தேர்வு செய்யாமல், வேலைகளைத் தேர்வு செய்யுங்கள்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காணொளி மூலம் பேசிய ராகுல் காந்தி, "மோடியின் கைகளிலிருந்து தேர்தல் நழுவுகிறது. அடுத்த 4, 5 நாள்களில் நாடகங்களை அரங்கேற்ற அவர் முடிவு செய்துள்ளார். உங்களுடைய கவனத்தைத் திசை திருப்புவார். 2 கோடி வேலைகளை வழங்குவதாக மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், தவறான ஜிஎஸ்டி கொள்கைகள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைதான் அவர் செயல்படுத்தினார்.
அதானிகளுக்காகதான் இந்த அரசு செயல்படுகிறது. ஆகஸ்ட் 15 முதல் 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கானப் பணிகளைத் தொடங்கவுள்ளோம்" என்றார் அவர்.