
பெங்களூரு சின்னசாமி மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக, பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் உள்பட 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். உளவுத் துறை ஏடிஜிபி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலர் கோவிந்தராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆர்சிபியின் முக்கிய நிர்வாகி நிகில் சோசாலே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இதுபற்றி மைசூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், தனக்கு தாமதமாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல் துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.
"விதான் சௌதா நிகழ்ச்சிக்கு மட்டுமே நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. சின்னசாமி மைதானம் வெளியே நிகழ்ந்த கூட்ட நெரிசல் என்பது காவல் துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள்.
காவல் துறையினர் உரிய பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். இதில் குறைபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் அரசியல் உள்நோக்கம் உடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் பிற்பகல் 3.50 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டநெரிசல் மற்றும் உயிரிழப்புகள் பற்றி மாலை 5.45 மணிக்கு தான் எனக்குத் தகவல் தெரியவந்தது. ஆர்சிபி வெற்றிப் பேரணிக்கு அனுமதி மறுத்தபோது, உள்துறை அமைச்சரின் தோல்வி என பாஜக கூறியது. தற்போது கூட்ட நெரிசலுக்கு அரசு மீது பழி சுமத்துகிறது.
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து கர்நாடக அரசி பரிசீலிக்கும். எந்த ஆட்சியிலும் இத்தகைய துயரச் சம்பவம் நிகழக் கூடாது. தனிப்பட்ட முறையில் இச்சம்பவம் என்னையும் அரசையும் காயப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் 5 காவல் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். உளவுத் துறை தலைவர், முதல்வர் அரசியல் செயலர் மாற்றப்பட்டுள்ளார்கள். இதைத் தீவிர வழக்காக எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அரசு எந்தத் தவறையும் செய்யவில்லை. இச்சம்பவம் வேதனையளிக்கிறது. ஆனால், அரசு நிர்வாகம் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கு தர்மசங்கடமான நிலை என்ற பேச்சுக்கே இடமில்லை. கும்பமேளாவில் பாலம் இடிந்தபோது மக்கள் உயிரிழந்தபோது, உத்தரப் பிரதேச முதல்வர் ராஜினாமா செய்தாரா? மதச்சார்பற்ற ஜனதா தளம் அல்லது பாஜக அப்போது குரல் எழுப்பினார்களா?" என்று சித்தராமையா கூறினார்.