அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைக்கு தலாய் லாமாவின் பெயரை இந்தியா சூட்டியதற்கு, கண்டனத்தைத் தெரிவித்துள்ளது சீன அரசு.
கடந்த வாரம் தேசிய மலையேற்ற மற்றும் சாகச விளையாட்டுகள் நிறுவனத்தை சேர்ந்து ஒரு மலையேற்றக் குழு, வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெயரிடப்படாத 20,942 அடி மலை ஒன்றின் உச்சியில் வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து இந்தப் பெயரிடப்படாத மலைக்கு 6-வது தலாய் லாமா, சாங்யாங் கியாட்சோவின் பெயர் சூட்டப்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தின் திராங்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய மலையேற்ற மற்றும் சாகச விளையாட்டுகள் நிறுவனம், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாகும்.
இது தொடர்பாக, `அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலைக்கு 6-வது தலாய் லாமாவின் பெயரைச் சூட்டியதன் மூலம், அவரது நீடித்த ஞானம் மற்றும் மோன்பா சமூகத்துக்கான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக மரியாதை செய்யப்பட்டது’ என்று செய்திக்குறிப்பு வெளியிட்டது மத்திய பாதுகாப்பு அமைச்சகம்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலைக்கு இந்தியா பெயரிட்டதை அடுத்து, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், `ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) பகுதி சீனாவுக்கு உரியதாகும். சீனப் பகுதியில் அருணாச்சலப் பிரதேசம் என்ற ஒன்றை இந்தியா நிறுவுவது சட்டவிரோதமாகும். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும்’ என்றார்.