பாகிஸ்தானுடனான மோதலில் சீனாவை எளிதில் புறக்கணித்துவிட முடியாது: சசி தரூர்

பாகிஸ்தானின் பாதுகாப்பு உபகரணங்களில் 81% சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.
பாகிஸ்தானுடனான மோதலில் சீனாவை எளிதில் புறக்கணித்துவிட முடியாது: சசி தரூர்
ANI
1 min read

பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதலில் `சீனாவை முற்றிலும் புறக்கணிக்க முடியாது’ என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறியுள்ளார், மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் நிலவிவந்த தொய்வு, மோதலுக்கு முன்பு முன்னேற்ற நிலையை அடைந்தது என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவரான தரூர், `நான் எனது வார்த்தைகளை குறைத்துப் பேசப்போவதில்லை, ஆனால் பாகிஸ்தானில் சீனாவுக்கு மகத்தான பங்களிப்பு உள்ளது என்பதை நாம் அறிவோம்’ என்றார்.

இந்திய தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த கருத்துகளை அவர் தெரிவித்தார்.

`சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு (பி.ஆர்.ஐ.) முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய ஒற்றை திட்டம், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்’ என்று தரூர் கூறினார். மேலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு உபகரணங்களில் 81% சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

`பாகிஸ்தானுடனான நமது மோதலில், சீனாவை முற்றிலுமாக புறக்கணித்துவிட முடியாது’ என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், `நமது அண்டை நாடுகளுடன் என்னென்ன சவால்கள் உள்ளன என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை, ஆனால் எதிரிகளைக்கூட தொடர்புகொள்வதற்கான வழிகளை இந்தியா எப்போதும் திறந்தே வைத்துள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்’ என்றார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அதை கண்டிக்கும் வகையிலான செய்திக்குறிப்பை ஏப்.25-ல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டது. ஆனால் தாக்குதலுக்குக் காரணமான, `தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ அமைப்பின் பெயர் அதில் இடம்பெறவில்லை.

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in