
ராஜஸ்தானின் ரன்தம்போர் தேசியப் பூங்காவில் 25 புலிகளைக் காணவில்லை என ராஜஸ்தான் மாநிலத்தின் தலைமை வனக் காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ரன்தம்போர் தேசியப் பூங்கா. இதில் சுமார் 75 புலிகள் வரை உள்ளதாக கடந்த புலிகள் கணக்கீட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரன்தம்போரில் 25 புலிகளைக் காணவில்லை என கடந்த திங்கள்கிழமை (நவ.4) அறிவித்துள்ளார் ராஜஸ்தான் மாநில தலைமை வனக் காப்பாளர் பவன் குமார் உபாத்யாய்.
கடந்த 2019 முதல் 2022 வரையிலான 4 வருட காலகட்டத்தில், ரன்தம்போரில் 13 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே வருடத்தில் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். அதிலும் குறிப்பாக கடந்த மே 17 முதல் செப்.30 வரை 14 புலிகள் காணாமல் போயுள்ளது. இந்தத் தகவலால் ராஜஸ்தானில் பரபரப்பு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, புலிகள் காணாமல் போன விவகாரத்தில் தகுந்த விசாரணையை மேற்கொள்ள 3 நபர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளார் தலைமை வனக் காப்பாளர் பவன் குமார். இந்த விவகாரத்தில் ரன்தம்போர் பூங்கா நிர்வாகத்தின் அலட்சியம் கண்டறியப்பட்டால், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ரன்தம்போர், சரிஸ்கா, முகுந்தாரா ஹில்ஸ், ராம்கர் விஷ்தாரி என 4 அறிவிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் உள்ளன. ரன்தம்போர் புலிகள் காப்பகம், தேசியப் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டம் வரை ரன்தம்போர் பகுதியை வேட்டைக் காடுகளாக ஜெய்ப்பூர் சமஸ்தான மன்னர்கள் பயன்படுத்தி வந்தனர்.