
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவத்துக்குக் கவலை தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வர் ஓமர் அப்துல்லா.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரங்களில் ஒன்றான ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தைப் பகுதியில் இன்று (நவ.3) கூடிய பொதுமக்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் குண்டெறிந்து தாக்குதல் நடத்தினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏறத்தாழ் 12 பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, `கடந்த சில நாட்களாக (காஷ்மீர்) பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் என்கவுண்டர்கள் குறித்த செய்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஸ்ரீநகரின் ‘ஞாயிறு சந்தை’ பகுதியில் உள்ள அப்பாவிக் கடைக்காரர்கள் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இன்றைய செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
அப்பாவிப் பொதுமக்களை குறிவைப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தும் வகையில் இந்தத் தாக்குதல்களின் வேகத்தை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்பு எந்திரம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
கடந்த சில நாட்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. நேற்று (நவ.3) ஸ்ரீநகரின் மையப்பகுதியான கன்யாரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவரும், அனந்தநாக்கில் தீவிரவாதிகள் இருவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.