ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்காதது ஏன்?: தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்

"மக்களவைத் தேர்தலால் நாடு முழுக்க பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதால், அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவது கடினம்."
ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்காதது ஏன்?: தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்
ANI

ஜம்மு-காஷ்மீரில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்த கூடுதல் பாதுகாப்புப் படை அவசியம் என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதிகளை வெளியிட தில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்தல் துணை ஆணையர்களுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். இந்த அறிவிப்பின்போது ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இடம்பெறவில்லை.

எனினும், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:

"ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவுக்கு அண்மையில் சென்றபோது, கூடுதல் பாதுகாப்புப் படை தேவை என்பதால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏறத்தாழ 10 முதல் 12 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பை அளிக்க வேண்டும். இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையின் அவசியம் உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன், விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

"ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவோம். டிசம்பருக்குப் பிறகு அங்கு தேர்தல் நடத்துவதற்கான சட்டரீதியிலான உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தோம். அங்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தோம். அங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, தேர்தல் நேரத்தில் அதிகளவிலான பாதுகாப்பு தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். மக்களவைத் தேர்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதால், அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குவது கடினம். மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்த மிகுந்த முனைப்புடன் உள்ளோம்" என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in