தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது?: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ல் எண்ணப்படும்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது?: தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
1 min read

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5-ல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

70 இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குக் கடைசியாக 2020-ல் நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளையும், பாஜக 8 தொகுதிகளையும் வென்றது. இந்நிலையில், நடப்பு சட்டப்பேரவையில் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 23-ல் நிறைவடைகிறது.

இது தொடர்பாக தில்லியில் இன்று (ஜன.7) செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தில்லி யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

தில்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்களும், 13,033 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது ஆம் ஆத்மி. 29 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. இதுவரை காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டுமே மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பதாகக் கூறி கடந்த செப்டம்பர் 21-ல் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in