பட்ஜெட் மீதான விவாதம்: ப. சிதம்பரம் வைத்த கோரிக்கைகள்

"குறைந்தபட்சம் நீட் தேர்வு வேண்டாம் என்று விரும்பும் மாநிலங்களுக்காவது விலக்கு அளிக்கலாம்."
பட்ஜெட் மீதான விவாதம்: ப. சிதம்பரம் வைத்த கோரிக்கைகள்
1 min read

மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய ப. சிதம்பரம், காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, மாநிலங்களவையில் உரையாற்றினார்.

"நாட்டில் எந்தவொரு பணியாக இருந்தாலும், ஒரு நாளுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்பட வேண்டும். விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும். மார்ச் மாதம் வரையிலான நிலுவையில் உள்ள கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். அக்னிபாத் திட்டத்தைக் கைவிட வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நீட் தேர்வு வேண்டாம் என்று விரும்பும் மாநிலங்களுக்காவது விலக்கு அளிக்கலாம்" என்று காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் கோரிக்கை வைத்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது பற்றி பேசிய ப. சிதம்பரம், "எங்களுடைய சிந்தனைகளை நீங்கள் எடுத்துக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. உங்களுக்கு (பாஜக) உதவுவதில் மகிழ்ச்சிதான். இந்த அவையில் நகலெடுப்பதற்குத் தடையில்லை" என்றார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற சொல் இடம்பெறாதது குறித்துப் பேசிய ப. சிதம்பரம், "நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற சொல் குறிப்பிடப்படவே இல்லை. திருவள்ளுவர் போன்றவர்களின் பெயர்களையோ, தமிழ்ப் பாடல்களோ மேற்கோள் காட்டப்படவில்லை. ஆந்திரத்துக்கும், பிஹாருக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் எந்த வெறுப்புணர்வும் கிடையாது. ஆனால், மற்ற மாநிலங்களின் நிலை என்ன?. நீங்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவிக்கும்போது, கூட்டாட்சி முறை மரணிக்கிறது. ஏப்ரலுக்கு முன்பும், கடந்த 10 ஆண்டுகளிலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிஹார் எப்படி நடத்தப்பட்டு வந்தன?" என்றார்.

மேலும், இந்த அரசு பணவீக்கத்தை தீவிரப் பிரச்னையாகக் கருதவில்லை என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in