
சத்தீஸ்கர் மாநிலத்தில், எளிதில் அணுக முடியாத மலைப்பகுதி மற்றும் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நக்சல் பாதிப்புக்கு உள்ளான மொஹ்லா, மன்பூர், அம்பாகர் சௌகி மாவட்டங்களில் இருக்கும் 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில அரசால் செயல்படுத்தப்படும் முதல்வரின் மஜ்ரதோலா வித்யுதிகரன் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மின்மயமாக்கல் வசதிகள் மூலம் சுமார் 540 குடும்பங்கள் பயனடையும் என்று மாநில அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 கிராமங்களைச் சேர்ந்த 540 குடும்பங்களில் 275 குடும்பங்களுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள குடும்பங்களுக்கு மின்சார வசதி செய்துகொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்கள் கிராமங்களில் முதல்முறையாக மின்மாற்றிகள் ஒளிர்ந்தபோது கிராமவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சில கிராமங்களில் குழந்தைகள் நடனமாடினார்கள், சிலவற்றில் முதியவர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினார்கள். கடினமான நிலப்பரப்பு, நக்சல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வது பெரும் சவால் நிறைந்த பணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கிராமங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் பல்புகள் பொறுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றைப் பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. மேலும், பல கிராமங்களில், சூரிய ஒளி தகடுகள் திருடப்பட்டதால், மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகித்து குழந்தைகள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.