மஹாராஷ்டிரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்தாண்டு திறக்கப்பட்ட 35 அடி சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது.
கடற்படை தினத்தை முன்னிட்டு மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்திலுள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் முழு உருவச் சிலையை பிரதமர் மோடி கடந்த டிசம்பரில் திறந்துவைத்தார். மேலும், இந்தக் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.
35 அடி கொண்ட இந்த சிலை இன்று பகல் 1 மணியளவில் விழுந்து உடைந்து சுக்குநூறானது. சிவாஜியின் சிலை விழுந்த இடத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சிலை விழுந்து உடைந்ததற்கான உண்மைக் காரணம் வல்லுநர்கள் குழுவால் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு, மூன்று நாள்களாக இங்கு கடுமையான காற்றுடன் கன மழை பெய்து வந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தரப்பில் இதற்கு உடனடியாக எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.