
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சிறிது நேரத்திலேயே, பாலத்திற்கான பெருமைக்குப் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையிலான செனாப் ரயில் பாலத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 6) காலை திறந்துவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில், செனாப் பாலம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது,
`1995-ல் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது இந்த ரயில்வே திட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. 2002-ல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இதை தேசிய திட்டமாக அறிவித்தார். உதம்பூர், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா இடையேயான 272 கிலோமீட்டர் ரயில் வழித்தடத்தில், சுமார் 160 கி.மீ. வழித்தடம் 2014-க்கு முன்பே திறக்கப்பட்டது. மோடி வந்து ஒப்பந்தத்தை கொடுத்து, வேலை தொடங்கப்பட்டது என்பதுபோல் அல்ல’ என்றார்.
முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அவர் கூறியதாவது,
`இந்த திட்டத்திற்காக நாங்கள் வாழ்த்துகிறோம், ஆனால் ஆட்சியில் ஏற்பட்ட தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை பிரதமர் மறந்துவிடக்கூடாது, இதை ஒரு சுயநலக்கார பிரதமரால் புரிந்துகொள்ள முடியாது. தனக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான பெருமையை சொந்தம் கொண்டாடவும் மோடி முயல்கிறார்’ என்றார்.
ஜெயராம் ரமேஷ் அளித்த தகவல்களின்படி, ஜம்மு-உதம்பூர் இடையிலான 53 கி.மீ. ரயில் வழித்தடத்தை பிரதமர் மன்மோகன் சிங், 2005-ல் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அனந்தநாக்-மஸோம் (ஸ்ரீநகரின் புறநகர் பகுதி) இடையிலான 66 கி.மீ. ரயில் வழித்தடத்தை 2008-லும், அதன்பிறகு மஸோம்-பாரமுல்லா இடையிலான 66 கி.மீ. ரயில் வழித்தடத்தை 2009-லும் பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்துள்ளார்.
அதன்பிறகு, அனந்தநாக்-காஸிகுண்ட் இடையிலான 18 கி.மீ. ரயில் வழித்தடத்தை 2009-லும், காஸிகுண்ட்-பனிஹால் இடையிலான 11 கி.மீ. ரயில் வழித்தடத்தை 2013-லும் மன்மோகன் சிங் திறந்து வைத்துள்ளார்.