
வீடியோகான் குழுமத்திற்கு ரூ. 300 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிப்பதற்காக ரூ. 64 கோடி லஞ்சம் பெற்றதாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண் இயக்குநருமான சந்தா கோச்சார் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (SAFEMA) கீழ் செயல்படும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த ஜூலை 3 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வீடியோகான் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்தி கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மூலம் லஞ்சப் பணம் அனுப்பப்பட்டதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது. பணம் வழங்கியது ஒரு தெளிவான பிரதிபலன் நடவடிக்கை என்றும், அமலாக்கத்துறையின் (ED) வழக்கை இது ஆதரிப்பதாகவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
மேலும், பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 50-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வலுவான ஆவண ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளை அமலாக்கத்துறை வழங்கியுள்ளதாகவும், அவை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்றும் தீர்ப்பாயம் கூறியது.
வீடியோகான் குழும நிறுவனமான எஸ்.இ.பி.எல்.லில் (SEPL) இருந்து தீபக் கோச்சாரின் கட்டுப்பாட்டில் உள்ள என்.ஆர்.பி.எல். (NuPower Renewables Pvt Ltd) நிறுவனத்திற்கு ரூ. 64 கோடி அனுப்பப்பட்டதாக தீர்ப்பாயம் விளக்கியது. ஐசிஐசிஐ வங்கி ரூ. 300 கோடி கடனை வீடியோகானுக்கு வழங்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
என்.ஆர்.பி.எல். நிறுவனத்தின் உரிமம் ஆரம்பத்தில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்திடம் இருப்பதாகக் காட்டப்பட்டாலும், உண்மையான கட்டுப்பாடு தீபக் கோச்சாரிடம் உள்ளது என்றும், அவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
மேலும், கடனுக்கான ஒப்புதலை அளிக்கும்போது இந்த உறவு தொடர்பான விவகாரங்களை சந்தா கோச்சார் அறிவிக்காததால், இது ஒரு முரண்பாட்டை தெளிவாகக் குறிப்பதாக தீர்ப்பாயம் கூறியுள்ளது.
கடந்த 2009-ல் கோச்சார் தலைமையிலான ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் குழுமத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ. 1,875 கோடி அளவிற்கு பல கடன்களை வழங்கியது. 2016-ல் ஆண்டில் இந்த பரிவர்த்தனைகளில் முரண்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த புகார்கள் தொடர்பான முதற்கட்ட விசாரணையை கடந்த 2018-ல் சிபிஐ தொடங்கியது.
அதன்பிறகு 2019 ஜனவரியில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே 2018 அக்டோபரில் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் பதவி விலகினார்.
அதன்பிறகு இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 2022-ல் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் மற்றும் தூத் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த மூவரும் ஜாமின் பெற்று வெளியே இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.