ஜேஎம்எம் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் சம்பாய் சோரன்

ஆகஸ்ட் 30 அன்று ராஞ்சியில் பாஜவில் இணைகிறார்.
ஜேஎம்எம் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் சம்பாய் சோரன்
1 min read

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக மூத்த தலைவர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நம்பிக்கை இருப்பதாகவும், பாஜகவில் இணையவுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்த நிலையில், இன்று ராஜினாமா செய்துள்ளார்.

"ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன். பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் ஜார்க்கண்டின் வெகுஜன மக்கள் பிரச்னைகளுக்கான எங்களுடையப் போராட்டம் தொடரும்" என்று சம்பாய் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஆகஸ்ட் 30 அன்று பாஜவில் இணையவுள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா குறிப்பிட்டுள்ளார். "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சற்று முன்னதாக சம்பாய் சோரன் சந்தித்தார். ஆகஸ்ட் 30 அன்று ராஞ்சியில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைகிறார்" என்றார் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா.

சம்பாய் சோரன் பாஜகவில் இணைவது பற்றி காங்கிரஸ் சந்தீப் தீக்‌ஷித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஹேமந்த் சோரன் தான் அங்கு மிகப் பெரிய தலைவர். சம்பாய் சோரன் பொறுப்பு முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் வந்தவுடன், அவர் மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு உரிய மரியாதை கிடைக்கப் பெறவில்லை என சம்பாய் சோரன் கூறுவது தவறு" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in