ஜார்க்கண்ட் முதல்வர் ராஜினாமா: ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த 28 அன்று பிணை வழங்கியது.
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த சம்பாய் சோரன்.
ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த சம்பாய் சோரன்.ANI

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

நிலமோசடி மற்றும் பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் பொறுப்பை ஏற்றார். சம்பாய் சோரன் 47 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் கடந்த 28 அன்று பிணையில் வெளியே வந்தார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்கியது.

ஹேமந்த் சோரன் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டம் ராஞ்சியிலுள்ள முதல்வர் சம்பாய் சோரன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகிய கட்சிகளால் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த முடிவை ஏற்று ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சம்பாய் சோரன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ராஜினாமா குறித்து சம்பாய் சோரன் கூறியதாவது:

"சில நாள்களுக்கு முன்பு நான் முதல்வராக்கப்பட்டேன். அரசுப் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. ஹேமந்த் சோரன் திரும்ப வந்ததையடுத்து, எங்களுடையக் கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது. எங்களுடையத் தலைவராக ஹேமந்த் சோரனைத் தேர்வு செய்துள்ளோம். தற்போது நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்" என்றார் சம்பாய் சோரன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in