வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30 அன்று முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 226-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் 133 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை கேரளம் சென்றடைந்தார்.
பாதிக்கப்பட்ட இடங்களை முதலில் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட அவர், பிறகு சாலை மார்க்கமாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்.
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடனிருந்தார்கள். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
"இந்தப் பேரிடர் சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் நொறுங்கிப் போயுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமையைக் கண்காணித்தேன். மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்தேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் நான் சந்தித்தேன்.
நிலச்சரிவு ஏற்பட்ட நாளன்று காலை முதல்வர் பினராயி விஜயனை அழைத்துப் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அவரிடம் உறுதியளித்தேன். தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை மற்றும் மருத்துவர்கள் அனைவரும் முடிந்தளவுக்கு விரைவாக சம்பவ இடத்தை வந்தடைந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற அவர்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார்கள். மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் உடனடியாக ஒன்று திரட்டப்பட்டன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தனித்துவிடப்பட்டதாக நினைக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கிறது. போதிய பணம் இல்லை என்ற காரணத்துக்காக எந்தப் பணியும் தடைபடவில்லை என்பது உறுதி செய்யப்படும்" என்றார் பிரதமர் மோடி.