வடகிழக்கு ஆயுதக்குழுக்களுடன் அமைதி உடன்படிக்கையைக் கையெழுத்திட்ட மத்திய அரசு
மத்திய அரசும், திரிபுரா மாநில அரசும் இணைந்து திரிபுராவைச் சேர்ந்த ஆயுதக்குழுக்களான அனைத்து திரிபுரா டைகர் படை மற்றும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி ஆகிய ஆயுதக்குழுக்களுடன் இன்று (செப்.04) தலைநகர் தில்லியில் அமைதி உடன்படிக்கை ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் முன்னிலையில் அமைதி உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையால் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியவை பின்வருமாறு:
`35 வருடங்களாக நடத்தி வந்த ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு திரிபுரா மாநிலம் முழுவதுக்குமான வளர்ச்சியில் பங்கேற்க நீங்கள் உறுதியேற்றுள்ளது எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியான விஷயமாகும். நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து பேச்சுவார்த்தை மற்றும் அமைதி நடவடிக்கைகள் வழியாக வடகிழக்கில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
முன்பு தில்லி மற்றும் வடகிழக்கு மக்களுக்கு இடையேயான தூரம் வெகு தொலைவில் இருந்தது. இந்த தூரத்தை சாலை, ரயில், விமானப் போக்குவரத்து ஆகியவற்றை உபயோகித்து அகற்றியதுபோல, மக்களின் இதயங்களிலிருந்த தூரத்தையும் பிரதமர் மோடி அகற்றியுள்ளார்.
இது வடகிழக்கில் பன்னிரெண்டாவதாகவும், திரிபுராவில் மூன்றாவதாகவும் கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்படிக்கை ஒப்பந்தமாகும். இதுவரை 10,000 கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு, பொது நீரோட்டத்தில் கலந்துள்ளனர். இன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தால் 328-க்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் அமைதிப்பாதைக்குத் திரும்புகின்றனர்’ என்றார்.